ஸ்ரீ சக்ர மகிமை :
வேத ரகசியங்களை எடுத்தியம்புவது புராணம். வேத வியாசர் 18 புராணங்களைத் தொகுத்தளித்தவர். அவற்றுள் பிரம்மாண்ட புராணம் எனும் புராணம் மகிமை வாய்ந்ததாகும். அதில் ஒரு பகுதியான லலிதா உபாக்யானத்தில் ஸ்ரீ சக்ர ரகசியம் கூறப்பட்டுள்ளது. அகஸ்திய மகா முனிக்கு மகாவிஷ்ணுவின் வடிவமாகிய ஸ்ரீ ஹயக்ரீவர் ஸ்ரீ சக்ர ரகசியத்தை உபதேசித்தருளினார். தசரதர் காமாட்சி அம்பிகையை உபாசனை செய்த புண்ணியத்தால் ஸ்ரீ ராமனையே திருமகனாகப் பெற்ற மகிமையையும் அதில் காணலாம். அகஸ்தியர், ஹயக்கிரீவரைப் பணிந்து, “தேவியின் யந்திரமாகிய ஸ்ரீ சக்ரத்தின் மகிமைகள் யாவை? அதை எவ்வாறு வழிபட வேண்டும் ” என்று வேண்டிக் கொள்ள, ஹயக்ரீவர் கூறுகிறார்: “தேவியின் யந்திரம் ஸ்ரீ சக்ரமே. அவளே திரிபுராம்பிகை, அவளே ஸ்ரீ மஹாலக்ஷ்மியும் ஆவாள். தேவியானவள் தானே தன் ஜோதிமயமான வடிவைத் தன் கண்களால் கண்டாள். அதுவே ஸ்ரீ சக்ரமாம். ஆதலால் சாட்சாத் ஆதிலட்சுமிதான் ஸ்ரீ சக்ரமென்பது தத்துவமாகும். அதை அர்ச்சித்துத்தான் ஸ்ரீ விஷ்ணுவே மோகினி அவதாரம் எடுத்தார். ஈஸ்வரன் சர்வ வித்யாதரன் ஆனார். ப்ரம்மாவும் படைக்கும் சக்தியைப் பெற்றார்.
இந்து சமயச் சித்தாந்தங்களின்படி கலியுகமானது அழிவின் யுகம். கலியுகத்தின் காலம் மொத்தம் 4,32,000 ஆண்டுகள் ஆகும். தற்போது நடந்து வருவது 5120வது வருடமாகும். ஆயினும் அழிவின் தொடக்கம் இதுவெண உணரலாம். உண்மை, நேர்மை, சமதர்மம் மறைந்து பொய்மையும், போர்களும் இயற்கைப் பேரழிவுகளும், உலகைச் சுட்டெரித்து வரும் வெப்பமயச் சூழலில், இயற்கையே வடிவான அம்பிகையைக் குளிரச் செய்யும் ஆற்றல் ஸ்ரீ சக்ர வழிபாட்டில் மறைந்துள்ளது என்பது பிரம்ம ரகசியம். அச்சுறுத்தும் பாம்பு முதல் அயரவைக்கும் அம்மை நோய் வரை அனைத்தையும் அம்பிகையாகப் பார்ப்பது நம் சமய மரபு. பிணியாக வருபவளும் அவள்தான். பிணிக்கு மருந்தாக வருபவளும் அவள்தான், அவளை வழிபட்டாலே துன்பம் யாவும் தீரும் என்பதில் சந்தேகமில்லை.
அம்பிகை வழிபாட்டில் சமயபேதம் இல்லை. “நிர்பேதா” – பேதங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டவள் அவள். எனவே ஸ்ரீ சக்ரம் விநாயகர் கோவில், முருகன் கோவில், சிவன் கோவில், விஷ்ணு கோவில், அம்மன் கோவில், ஐயப்பன், ஆஞ்சநேயர் கோவில்கள் என எல்லா ஆலயங்களிலும் பிரதிஷ்டை செய்யப்பட வேண்டும். அம்பிகையே தாய் வடிவான பெண் என்பதால் இல்லங்களிலும் ஸ்ரீ சக்ரம் வைத்து, பெண்களே ஸ்ரீ சக்ர வழிபாடு செய்யலாம். ஸ்ரீ சக்ர வழிபாட்டிற்கு பெண்களுக்குதான் முழுத்தகுதியும் உண்டு. விலக்க வேண்டிய நாட்கள் தவிர பிற நாட்களில் பெண்கள் ஸ்ரீ சக்ரவழிபாட்டைச் செய்யலாம். அலுவலகங்கள், வியாபார ஸ்தலங்கள். தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள், அறிவியல் ஆய்வுக்கூடங்கள் போன்று எங்கும் ஸ்ரீ சக்ரம் பிரதிஷ்டை செய்து வழிபட்டால் ஒற்றுமையும், அமைதியும், சகல செல்வங்களும் முக்கியமாக ஆபத்துக்களிலிருந்து பாதுகாப்பும் ஏற்படும். ஸ்ரீ சக்ர வழிபாட்டிற்கு குரு உபதேசமும், ஸ்ரீ வித்யா மூலமந்திர உபதேசமும் அவசியம் தேவை. முறையாக அவற்றைப் பெற்று வழிபட்டால் எல்லா நன்மைகளும் உண்டாகும். வாசனை மிகுந்த மலர்களாலேயே ஸ்ரீ சக்ரத்தை அர்ச்சிக்க வேண்டும்.
ஸ்ரீ சக்ர மஹாமேரு வழிபாட்டிற்கு நூற்றியெட்டு மந்திரங்கள் அடங்கிய அஷ்டோத்திரமும், நூற்றியென்பது மந்திரங்கள் கொண்ட கட்கமாலா ஸ்தோத்திரமும், முன்னூறு மந்திரங்கள் கொண்ட லலிதா திரிசதியும், ஆயிரம் நாமாவளிகள் கொண்ட லலிதா சஹஸ்ரநாமமும், இவற்றிற்கெல்லாம் ஆதாரமாகிய பஞ்சதசாக்ஷ்ரி, ஷோடசி போன்ற ஸ்ரீ வித்யா மூலமந்திரங்களும் குரு முகமாக அறிந்து உபதேசம் பெற்றுக் கொள்வது சாலச்சிறந்தது. சௌந்தர்யலஹரியும் இவ்வழிபாட்டில் முக்கிய இடம் வகிக்கும். இவையாவும் வடமொழியில் உள்ளன. தமிழில் திருமந்திரம் மற்றும் அபிராமி அந்தாதி ஆகியவற்றில் ஸ்ரீ வித்தை பற்றியும், ஸ்ரீ சக்ரம் பற்றியும் குறிப்புகள் உள்ளன. நூற்றியெட்டு அர்ச்சனை மற்றும் அன்னைக்கு ஆயிரம் போற்றி எனும் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம தமிழ் மொழி பெயர்ப்பு நூல்கள் யாவரும் செய்யக்கூடிய எளிய வழிபாட்டிற்கு மிகவும் துணை புரிகின்றன, நவாவரண பூஜை என்று ஒன்று உண்டு. அனுபவமும், ஞானமும் உடைய வைதீகர்களின் உதவியுடன் அதனை இல்லங்களிலும் ஆலயங்களிலும் நிகழ்த்தலாம்.
ஸ்ரீ சக்ரம் என்பது இருபரிமாண வடிவமாகும். சதுரமான தகட்டில் அது அமைக்கப்படுவதால் நீளம், அகலம் என்ற இருபரிமாணங்கள் மட்டுமே உண்டு. அதனையே நீளம், அகலம், உயரம் என்ற முப்பரிமானத்தில் அமைப்போமானால் அது ஸ்ரீ மஹாமேரு என்று அழைக்கப்படும். அம்பிகை வழிபாட்டில் உருவ வழிபாடு நான்கு பரிமாணங்கள் உடையது. அதில் நீளம், அகலம், உயரம் என்ற முப்பரிமாணங்களுடன் தேவியின் அழகுத்திருக்கோலமும் ஒரு பரிமாணமாகும். ஸ்ரீ மஹாமேரு முப்பரிமாணம் கொண்டது, ஸ்ரீ சக்ர வழிபாட்டில் இரு பரிமாணம் மட்டுமே. ஸ்ரீ ஆகர்ஷண வித்யா தியானத்தில் அனைத்துப் பரிமாணங்களும் ஒருமித்தும், பின்பு பரிமாணங்களுக்கப்பால் கடந்த நிலையில் சங்கமித்தும் மெய்யுணர்வு பெறுகிறோம்.
ஸ்ரீ சக்ர வழிபாட்டின் மகிமைகள் :
வெண்மை நிறமுடைய வாசனை மிகுந்த மலர்களால் ஸ்ரீ சக்ரத்தை அர்ச்சிப்பவர்களுக்கு சரஸ்வதி கடாட்சம் நிறையும். கல்வி, கலைகளில் சிறந்த தேர்ச்சி அடைவர். “சகலகலாவள்ளி மாலை” சொல்லி இவ்வழிபாட்டைச் செய்யலாம். நெய்ப்பாயசம், வடை, வெண்பொங்கல் நிவேதனம் செய்ய வேண்டும். 48 நாட்கள் இவ்வழிபாட்டினைச் செய்த பிறகு, வாரம் தோறும் வெள்ளிக்கிழமை தொடர்ந்து செய்தால் வழிபடுவோரின் நாவில் சரஸ்வதி தாண்டவமாடுவாள்.
துளசியாலும், தாமரையிதழ்களாலும் ஸ்ரீ சக்ரத்திற்கு அர்ச்சனை செய்து வழிபட்டால் தன ஆகர்ஷணமும், லக்ஷ்மி கடாட்சமும் நிறையும். சர்க்கரைப் பொங்கல், கற்கண்டு சாதம் மற்றும் தேன் நிவேதனம் செய்வது சிறப்பாகும். சிவப்பு அரளி மற்றும் வெள்ளை அரளியால் அர்ச்சித்து எலுமிச்சம்பழ சாதம் நைவேத்யம் படைத்திட தொழில், உத்யோகம், அரசாங்க அனுகூலம் ஏற்படும்.
மஞ்சள் நிற மலர்களால் அர்ச்சனை செய்தால் நோய்கள் அகலும், எதிர்ப்புகள், நீதிமன்ற வழக்குகள் தீரும். ஸ்ரீ சக்ரத்தில் தேவியை ஸ்ரீ பாலா எனும் குழந்தை வடிவாக தியானித்து பால் அன்னம், தயிர் அன்னம் படைத்து வழிபட்டால் புத்திரப்பேறு ஏற்படும். அமாவாசைக்கு அடுத்த தினமான பிரதமை முதல் பௌர்ணமி வரை ஸ்ரீ சக்ரத்தை முறைப்படி பூஜித்தால், தீராத துன்பங்கள் தீர்ந்து மன நிம்மதியும், மகிழ்ச்சியும் ஏற்படும். இதனால் மனநலம் பாதிக்கப்பட்டவர்களும் விரைவில் குணமடைவர். நோயாளிகள் அவரவர் பிறந்த நட்சத்திரத்தில் ஸ்ரீ சக்ர பிரதிஷ்டை செய்து 48 நாட்கள் (ஒரு மண்டலம்) அர்ச்சித்து வர நோயிலிருந்து விடுபடுவர்.
ஸ்ரீ சக்ரத்தில் தாரம்பிகை மூல மந்திரத்தைக் கொண்டு ஆவாஹனம் செய்து வழிபட்டால் வெளிநாடு சம்பந்தபட்ட தொழில், உத்யோகம், வியாபாரம் செழிக்கும். வெளிநாட்டில் வசிக்கும் மகன், மகள், உற்றார், உறவினர் நலனுக்காகவும் இவ்வாறு வழிபடலாம். ஸ்ரீ சக்ரம் எங்கே இருக்கிறதோ அங்கே துஷ்ட சக்திகளும் பில்லி, சூனியம் போன்ற மாந்திரீகங்களும் அனுகவே முடியாது. ஸ்ரீ சக்ரம் எந்த இல்லத்தில் உள்ளதோ அங்கு எவ்விதமான வாஸ்து தோஷங்கள் இருப்பினும் அவை கட்டுப்படும்.
பொது இடங்களாகிய ஆலயங்கள், திருமடங்கள், தியான பீடங்கள், கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் அலுவலகங்கள் போன்றவற்றில் எல்லோரும் நலம் பெற வேண்டி “பிரஜா பிரதிஷ்டை” முறைப்படி ஸ்ரீ சக்ரம் அமைக்கபட்டால் ஒற்றுமையும், அமைதியும் அன்பும் உலகெங்கும் நிலவும்.
ஸ்ரீ சக்ரத்தின் வடிவமைப்பு :
அம்பிகை ஸ்தூல வடிவில் நாற்கரம் பொருந்திய தேவியாக. பாசம் அங்குசம், கரும்புவில் மற்றும் மலர்கணை ஏந்தி, இடது கால் ஊன்றி, வலது கால் மடித்து அமர்ந்த நிலையில் இருக்கின்றாள். சூட்சும வடிவில் அன்னை ஸ்ரீ யந்திரம் அல்லது ஸ்ரீ சக்ரமாக தோன்றுகிறாள். காரண வடிவில் ஸ்ரீ வித்யா மந்திரமாகத் திகழ்கின்றாள். மோகினி ஹ்ருதயம், வாமகேஸ்வர தந்திரம் போன்ற நூல்களிலும். லட்சுமிதரர் எழுதிய சௌந்தரிய லஹரி நூலின் விளக்கவுரையிலும் ஸ்ரீ சக்ர அமைப்பு நன்கு விளக்கப்படுகின்றது. தந்திர மார்கம் ஸ்ரீ சக்ரத்தின் ஆற்றல்மிகு மையங்களை தேவதைகளாக உருவகித்து வணங்கும் முறையாகும். ஸ்ரீ வித்யா என்பது மெய்ஞான நிலையில் அவற்றை விளக்குகின்றது, ஸ்ரீ சக்ரம் என்பது பிரபஞ்சத்தின் ஏகபிரம்மத் தன்மையை (ஒருமைத் தத்துவத்தை) விளக்குவதாகும். ஆனால் “பிரம்மம் ஒன்றே” என்ற அத்வைத நிலையை அடைய நாம் ஒன்பது படிநிலைகளைக் கடந்தாக வேண்டும். அவைகளே “ஆவரணங்கள்” அல்லது மறைப்புகள் எனப்படும். அவற்றைக் கடக்கவே நவாவரண பூஜை செய்கிறோம்.
ஸ்ரீ சக்ரத்தில் முதலாவது ஆவரணம் :
த்ரைலோக்ய மோகனச் சக்ரம் எனப்படும். திரிபுரை என்ற பெயரில் அன்னை பிரகட யோகினிகளின் தலைவியாக நிற்கிறாள். நான்கு புறமும் உள்ள சதுர ரேகைகள் வெளியையும், மூன்று வட்டங்கள் இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என்ற முக்காலங்களையும் உணர்த்துகின்றன. திரிபுரா தேவியை நான்கு கரங்கள் உடையவளாகவும் ஸ்படிக நிறம் கொண்டவளாகவும், முத்து மணிகளால் அலங்கரிக்கப்பட்டவளாகவும், புத்தகம், தாமரை மலர் ஆகியவற்றைக் கரங்களில் ஏந்தியவளாகவும் தியானிக்க வேண்டும். இந்த சதுரமும், வட்டமும் நெருப்பில் நெருப்பாகத் திகழ்பவை. ஒன்று சிவம்; மற்றொன்று சக்தி.
இரண்டாவது ஆவரணம் :
சர்வா ஸாபரிபூரகச் சக்ரம் ஆகும். இது பதினாறு இதழ்கள் கொண்ட தாமரை போல் மலர்ந்திருக்கின்றது. இங்கு விளங்கும் பதினாறு யோகினி சக்திகள் அம்பிகையின் பக்தர்களின் வேண்டுதல் நிறைவேற்றும் சக்தி படைத்தவர்களாகத் திகழ்கின்றனர்.
மூன்றாவது ஆவரணம் :
சர்வ சம்ஷோபண சக்ரம் ஆகும். இது எட்டு இதழ்கள் கொண்ட தாமரையாக காட்சியளிக்கின்றது. இங்கு அனங்கமதனா முதலிய சக்திகள் உள்ளனர்.
நான்காவது ஆவரணம் :
சர்வ சௌபாக்யதாயகச் சக்ரம். இதில் பதினான்கு முக்கோணங்கள் காணப்படுகின்றன. கீழ் ஏழு, மேல் ஏழு எனப்படும், பதினான்கு புவனங்களையும் குறிக்கின்றது. இதன் தலைவி திரிபுரவாசினி.
ஐந்தாவது ஆவரணம் :
சர்வார்த்த சாதகச் சக்ரம் ஆகும். இதனை வெளிப்பத்து கோணங்கள் என்று கூறுவர். இச்சக்ரத்தை வழிபடும் பக்தருக்கு வாழ்வில் வேண்டுவனயாவும் சாதகமாகவே நிகழும் என்பது அனுபவ உண்மையாகும். இதன் அதிபதியாக விளங்குபவள் ஸ்ரீ மஹா திரிபுர சுந்தரியாவாள்.
ஆறாவது ஆவரணம் :
சர்வ ரக்ஷகாகரச் சக்ரம் என்று கூறப்படும். இங்கு உட்பத்துக் கோணங்கள் காணப்படுகின்றன. இச்சக்ரத்தில் அன்னை அனைத்தும் அறிந்த ஞான வடிவினளாகவும், எல்லா ஆற்றல்களும் பொருந்தியவளாகவும், சகல செல்வங்களும் உடையவளாகவும், தன்னை வழிபடும் பக்தர்களுக்கு கல்வி, செல்வம், ஆரோக்கியம் ஆகிய நலன்களை அருள்பவளாகவும். வழிபடுவோரின் எல்லா பாபவங்களையும் நீக்குபவளாகவும், ஆனந்தமயமான எல்லா நன்மைகளும், அருள்பவளாகவும் திகழ்கின்றாள்.
ஏழாவது ஆவரணம் :
சர்வ ரோகஹரச் சக்ரம் என்றழைக்கப் படுகின்றது. இதில் எட்டு கோணங்கள் காணப்படுகின்றன. அவற்றில் வசினி, காமேஸ்வரி, மோதினி, விமலா, அருணா, ஜயினி, கௌலினி ஆகிய எட்டு வாக்தேவியர்கள் வசிக்கின்றனர். இவர்கள் தாம் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமத்தைப் படைத்தவர்கள் ஆவர். இச்சக்ரத்தை நீங்காமல் நினைவில் கொள்வோருக்கு சர்வரோகங்களும் நீங்கும்.
எட்டவாது ஆவரணம் :
சர்வ சித்திப்ரத சக்ரம் என்று கூறப்படும். இங்கு முக்கோணம் மட்டும் உள்ளது. இதில் காமேசி, வஜ்ரேசி, பகமாலினி எனும் முப்பெரும் தேவியர் உறைகின்றனர். இதன் அதிதேவதை திரிபுராம்பா எனப்படுவாள். பக்தரின் ஆணவம், கர்மம், மாயை என்ற மும்மலங்களும் இச்சக்ர வழிபாட்டால் நீங்குகின்றன. பேராசையைக் கட்டுப்படுத்துதல், வைராக்யத்துடன் வாழ்தல் மற்றம் அம்பிகையின் திருவடிகளில் பூரணச் சரணாகதி அடைதல் ஆகிய நிலைபேறுகளை இச்சக்ரத் தியானம் நமக்கு அளிக்கின்றது.
ஒன்பதாவது ஆவரணம் :
“பிந்து” எனும் மையமாகிய ஒரு புள்ளி. இதனை பேரானந்தமயச் சக்ரம் என்பர். சிவசக்தி ஐக்ய வடிவினளாக அம்பிகை இங்கு அரசாட்சி புரிகின்றாள். ஸ்ரீ சக்ர வழிபாட்டில் மனதை நிலைப்படுத்தி, ஒருமுகப்படுத்தி மெய்ஞானம் பெறும் மையம் இதுவேயாகும். இன்பம், துன்பம் என்ற இரு நிலை நீங்கி ஞானநிலை எய்த இச்சக்ர வழிபாடு உதவும்.
ஸ்ரீ சக்ரத்திற்கு 43 முக்கோணச் சக்ரம் என்று மற்றொரு விளக்கமும் உண்டு. பதினான்கு கோணங்களும், வெளிப்பத்து, உட்பத்து கோணங்களும், எட்டுக் கோணமும், ஒரு முக்கோணமும் ஆகச் சேர்ந்து நாற்பத்தி மூன்று முக்கோணங்கள் அமைகின்றன. ஆனால் உண்மையில் உற்றுநோக்கிடில் மேல் நோக்கிய நான்கு பெரிய முக்கோணங்களும், கீழ் நோக்கிய ஐந்து பெரிய முக்கோணங்களும் தெரியும். மேல் நோக்கிய நான்கு முக்கோணங்களும் சிவாம்சம் ஆகும். கீழ்நோக்கிய ஐந்து முக்கோணங்கள் சக்தி அம்சம் ஆகும். இதனையே அபிராம பட்டர் “ஒளிநின்ற கோணங்கள் ஒன்பதும் மேவி உறைபவளே” என்று பாடுகின்றார்.
எளிய ஸ்ரீ சக்ர வழிபாடு - தமிழில் :
ஸ்ரீ சக்ர பூஜை தினசரி வழிபாடாகவும் அல்லது வெள்ளிக்கிழமை, பௌர்ணமி மற்றம் விசேஷ தினங்களில் செய்யப்படும் சிறப்பு வழிபாடாகவும் செய்யப்படலாம். ஸ்ரீ சக்ர உபாசனையில் விருப்பமும், ஈடுபாடும் உடையவர்கள் முறையான குரு தீட்சை பெற்று பிறகு நாற்பத்தியெட்டு நாட்கள் விரதத்துடன் வழிபட்டு ஆலயதரிசனம், வேள்வி தானம், அன்னதானம் போன்றவற்றுடன் நிறைவு செய்ய நற்பலன் கிடைக்கும். உள்ளத்தூய்மை, உடல் தூய்மையுடன் பின்வரும் எளிய வழிபாட்டை அனைவரும் செய்யலாம். ஸ்ரீ சக்ர பூஜை செய்பவர்கள் முதலில் கிழக்கு முகமாக நின்று சூரிய நமஸ்காரம் செய்து கொண்டு பதினொரு முறை ஓம்காரத்தை உச்சரிக்க வேண்டும். காயத்ரி மந்திர உபதேசம் உள்ளவர்கள் அங்கநியாசம், கரநியாசம், ஆசமனம் மற்றம் பிராணாயாமத்துடன் காயத்ரி மந்திரத்தை பத்து முதல் நூற்றியெட்டு முறை ஜபம் செய்து கொள்ளலாம்.
வடமொழியில் உள்ள மந்திரங்களை தகுந்த உச்சரிப்புடன் சொல்லும்போது அளப்பரிய ஆற்றல் உண்டாகும். ஆனால் அதற்கான பயிற்சியின்றி உச்சரிப்பு பிழையேற்படுமேயானால் பலனில்லை. தமிழ் மட்டுமே அறிந்தவர்களும் பின்பற்றக்கூடிய வகையில் எளிய தமிழ் போற்றிகளை இங்கு வழங்குகின்றோம். இவை வடமொழியில் உள்ள மந்திரங்களின் நேரடி மொழி பெயர்ப்புகள் ஆகும். எனவே எளிதில் சொல்லவும் வழிவகை உண்டு. எண்ணம், சொல், செயல் மூன்றும் ஒன்றிணைந்து இவற்றை உச்சரித்தால் அம்பிகையின் அருள் நிச்சயம் கிட்டும்.
விநாயகர் வழிபாடு :
ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்திமகன்றனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்து அடி போற்றுகின்றேனே.
குருவழிபாடு :
தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமம் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே.
ஸ்ரீ சக்ரத்தில் ஸ்ரீ லலிதாம்பிகை ஆவாஹனம் :
குறிப்பிட்ட மலர்களை இருகரங்களில் ஏந்தி, பின்வரும் அந்தாதியைப் பாடி சிரசிற்கு மேலே கரங்களைக் குவித்து அம்பிகையை சிவசக்தி ஐக்கிய ரூபிணியாக தியானித்து மலர்களை ஸ்ரீ சக்ரத்தில் சேர்த்தல் வேண்டும்.
- வெளிநின்ற திருமேனியை
- பார்த்தென்விழியும் நெஞ்சம்
- களிநின்ற வெள்ளம் கரைகண்ட
- தில்லை கருத்திள்ளே
- தெளி நின்ற ஞானம் திகழ்கின்ற
- தென்ன திருவுளமோ
- ஒளிநின்ற கோணங்கள் ஒன்பதும்
- மேவி உறைபவளே
மலர் அர்ச்சனை :
குங்குமத்தாலோ, குறிப்பிட்ட மலர்களாலோ இனிவரும் அர்ச்சனைகளைச் செய்யலாம்.
முதலாவது ஆவரணம் | நான்கு சதுர ரேகைகளும் மூன்று வட்டங்களும் | த்ரைலோக்ய மோகனச் சக்ரம் :
- ஓம் அணிமா சித்தியேபோற்றி
- ஓம் லகிமா சித்தியேபோற்றி
- ஓம் மஹிமா சித்தியே போற்றி
- ஓம் ஈசித்வ சித்தியே போற்றி
- ஓம் வசித்வ சித்தியே போற்றி
- ஓம் ப்ரகாம்ய சித்தியேபோற்றி
- ஓம் புத்தி சித்தியே போற்றி
- ஓம் இச்சா சித்தியே போற்றி
- ஓம் ப்ராப்தி சித்தியே போற்றி
- ஓம் சர்வகாம சித்தியே போற்றி
- ஓம் ப்ராஹ்மியே போற்றி
- ஓம் மாஹேஸ்வரியே போற்றி
- ஓம் கௌமாரியே போற்றி
- ஓம் வைஷ்ணவியே போற்றி
- ஓம் வாராஹியே போற்றி
- ஓம் மாஹேந்திரியே போற்றி
- ஓம் சாமுண்டா போற்றி
- ஓம் மகாலட்சுமியே போற்றி
- ஓம் சர்வசம்ஷோபிணி முத்ரா சக்தியே போற்றி
- ஓம் சர்வவித்ராவிணி முத்ரா சக்தியே போற்றி
- ஓம் சர்வகர்ஷிணி முத்ரா சக்தியே போற்றி
- ஓம் சர்வ வசங்கரீ முத்ரா சக்தியே போற்றி
- ஓம் சர்வோன்மாதினி முத்ரா சக்தியே போற்றி
- ஓம் சர்வ மகாங்குசாமுத்ரா சக்தியே போற்றி
- ஓம் சர்வ கேசரீ முத்ரா சக்தியே போற்றி
- ஓம் சர்வ யோநி முத்ரா சக்தியே போற்றி
- ஓம் சர்வ திரிகண்டா முத்ரா சக்தியே போற்றி
மூன்று லோகங்களையும் மயக்கும் சக்தி வாய்ந்த த்ரைலோக்ய மோகனச் சக்ரத்தின் அதிதேவதையாகிய திரிபுரா தேவிக்கும், ப்ரகடயோகினி சக்திகளுக்கும் பரிவார தேவதைகளுக்கும் இந்த மலர் அர்ச்சனையை மகிழ்வோடு சமர்ப்பிக்கிறேன்.
இரண்டாவது ஆவரணம் | சர்வாசா பரிபூரகச் சக்ரம் 16 இதழ் தாமரை :
- ஓம் காமாகர்ஷிணி நித்யகலா தேவியே போற்றி
- ஓம் புத்யாகர்ஷிணி நித்யகலா தேவியே போற்றி
- ஓம் அகங்காரகர்ஷிணி நித்யகலா தேவியே போற்றி
- ஓம் சப்தாகர்ஷிணி நித்யகலா தேவியே போற்றி
- ஓம் ஸ்பரிசாகர்ஷிணி நித்யகலா தேவியே போற்றி
- ஓம் ரூபாகர்ஷிணி நித்யகலா தேவியே போற்றி
- ஓம் ரசாகர்ஷிணி நித்யகலா தேவியே போற்றி
- ஓம் கந்தாகர்ஷிணி நித்யகலா தேவியே போற்றி
- ஒம் சித்தாகர்ஷிணி நித்யகலா தேவியே போற்றி
- ஓம் தைர்யாகர்ஷிணி நித்யகலா தேவியே போற்றி
- ஓம் ஸம்ருத்யா கர்ஷிணி நித்யகலா தேவியே போற்றி
- ஓம் நாமா கர்ஷிணி நித்யகலா தேவியே போற்றி
- ஓம் பீஜாகர்ஷிணி நித்யகலா தேவியே போற்றி
- ஓம் ஆத்மாகர்ஷிணி நித்யகலா தேவியே போற்றி
- ஓம் அம்ருதாகர்ஷிணி நித்யகலா தேவியே போற்றி
- ஓம் சரீராகர்ஷிணி நித்யகலா தேவியே போற்றி
எல்லா விருப்பங்களையும் நிறைவேற்றி வைக்கும் சக்தி வாய்ந்த சர்வாசா பரிபூரகச் சக்ரத்தின் அதிதேவதையாகிய திரிபுரேசிக்கும், குப்த யோகினிகளுக்கும், பரிகார தேவதைகளுக்கும் இந்த மலர் அர்ச்சனையை மகிழ்வோடு சமர்பிக்கிறேன்.
மூன்றாவது ஆவரணம் | சர்வசம்ஷோபண சக்ரம் எட்டு இதழ் தாமரை :
- ஓம் அனங்க குஸுமா தேவியே போற்றி
- ஓம் அனங்க மேகலா தேவியே போற்றி
- ஓம் அனங்க மதனா தேவியே போற்றி
- ஓம் அனங்க மதனாதுரா தேவியே போற்றி
- ஓம் அனங்க ரேகா தேவியே போற்றி
- ஓம் அனங்க வேகினிதேவியே போற்றி
- ஓம் அனங்க அங்குசா தேவியே போற்றி
- ஓம் அனங்க மாலினி தேவியே போற்றி
அனைத்தையும் ஓய்வின்றி இயங்க வைக்கும் சர்வசம்ஷோபண சக்ரத்தின் அதிதேவதையாகிய திரிபுர சுந்தரி தேவிக்கும், குப்ததர யோகினி சக்திகளுக்கும், சகல பரிவார தேவதைகளுக்கும் மகிழ்வோடு இந்த மலர் அர்ச்சனையை சமர்பிக்கிறேன்.
நான்காவது ஆவரணம் | சர்வ சௌபாக்யதாயகச் சக்ரம் :14 கோணங்கள் :
- ஓம் சர்வ சம்க்ஷோபிணி சக்தியே போற்றி
- ஓம் சர்வ வித்ராவிணி சக்தியே போற்றி
- ஓம் சர்வாகர்ஷிணி சக்தியே போற்றி
- ஓம் சர்வாஹ்லாதினி சக்தியே போற்றி
- ஓம் சர்வ சம்மோஹினி சக்தியே போற்றி
- ஓம் சர்வ ஸ்தம்பினி சக்தியே போற்றி
- ஓம் சர்வ ஜ்ரும்பிணி சக்தியே போற்றி
- ஓம் சர்வ வசங்கரி சக்தியே போற்றி
- ஓம் சர்வ ரஞ்சனி சக்தியே போற்றி
- ஓம் சர்வ வோன்மாதினி சக்தியே போற்றி
- ஓம் சர்வார்த்த சாதினி சக்தியே போற்றி
- ஓம் சர்வ சம்பத்பூரணி சக்தியே போற்றி
- ஓம் சர்வ மந்திரமயி சக்தியே போற்றி
- ஓம் சர்வ த்வந்த்வ சக்தியே போற்றி
எல்லாவிதமான சௌபாக்யங்களையும் நல்கும் சர்வ சௌபாக்யதாயகச் சக்ரத்தின் அதிதேவதையான திரிபுராவாசினிக்கும், சம்ப்ரதாய யோகினி சக்திகளுக்கும், பரிவார தேவதைகளுக்கும் இந்த மலர் அர்ச்சனையை மகிழ்வோடு சமர்ப்பிக்கிறேன்.
ஐந்தாவது ஆவரணம் | சர்வார்த்த சாதகச் சக்ரம் : வெளிப்பத்து கோணங்கள் :
- ஓம் சர்வ சித்திப்ரதா தேவியே போற்றி
- ஓம் சர்வ சம்பத்ப்ரதா தேவியே போற்றி
- ஓம் சர்வ ப்ரியங்கரி தேவியே போற்றி
- ஓம் சர்வ மங்களகாரிணி தேவியே போற்றி
- ஓம் சர்வ காமப்ரதா தேவியே போற்றி
- ஓம் சர்வ துக்கவிமோசினி தேவியே போற்றி
- ஓம் சர்வ மிருத்யு ப்ரசமனி தேவியே போற்றி
- ஓம் சர்வ விக்னநிவாரிணி தேவியே போற்றி
- ஓம் சர்வ சௌபாக்யதாயினி தேவியே போற்றி
அனைத்து காரியங்களையும் சாதகமாக நிறைவேற்றியருளும் சர்வார்த்த சாதகச் சக்ரத்தின் அதிதேவதையாகிய திரிபுரா தேவிக்கும், குலோதீர்ண யோகினி சக்திகளுக்கும், பரிவார தேவதைகளுக்கும் இந்த மலர் அர்ச்சனையை மகிழ்வோடு சமர்பிக்கிறேன்.
ஆறாவது ஆவரணம் | சர்வ ரக்ஷாகர சக்ரம் : உள்பத்து கோணங்கள் :
- ஓம் சர்வக்ஞா தேவியே போற்றி
- ஓம் சர்வசக்தி தேவியே போற்றி
- ஓம் சர்வ ஐஸ்வர்யப்ரதா தேவியே போற்றி
- ஓம் சர்வ ஞானமயி தேவியே போற்றி
- ஓம் சர்வ வ்யாதி நிவாரிணி தேவியே போற்றி
- ஓம் சர்வாதார ஸ்வரூபா தேவியே போற்றி
- ஓம் சர்வ பாபஹர தேவியே போற்றி
- ஓம் சர்வானந்த மயீ தேவியே போற்றி
- ஓம் சர்வரக்ஷா ஸ்வரூபிணி தேவியே போற்றி
- ஓம் சர்வேப்சித பலப்ரதா தேவியே போற்றி
அனைத்து ஆபத்துக்களிலிருந்தும் காப்பாற்றும் சர்வ ரக்ஷாகரச் சக்ரத்தின் அதிதேவதையான திரிபுரா மாலினீ தேவிக்கும், நிகர்ப்ப யோகினி சக்திகளுக்கும், பரிவார தேவதைகளுக்கும் இந்த மலர் அர்ச்சனையை சமர்ப்பிக்கிறேன்.
ஏழாவது ஆவரணம் | சர்வ ரோகஹரச் சக்ரம் : எட்டுக்கோணங்கள் :
- ஓம் வசினீவாக் தேவியே போற்றி
- ஓம் காமேஸ்வரி தேவியே போற்றி
- ஓம் மோதினீ தேவியே போற்றி
- ஓம் விமலா தேவியே போற்றி
- ஓம் அருணா தேவியே போற்றி
- ஓம் ஜயினீ தேவியே போற்றி
- ஓம் சர்வேஸ்வரி தேவியே போற்றி
- ஓம் கௌலினீ தேவியே போற்றி
எல்லாநோய் நொடிகளையும் நீக்கியருளும், சர்வ ரோகஹரச் சக்ரத்தின் அதிதேவதையாகிய திரிபுர சித்தா தேவிக்கும், ரகஸ்ய யோகினி சக்திகளுக்கும், பரிவார தேவதைகளுக்கும் இந்த மலர் அர்ச்சனையை சமர்ப்பிக்கிறேன்.
எட்டாவது ஆவரணம் | சர்வ சித்திப்ரத சக்ரம் : முக்கோணம் :
- ஓம் பாண சக்தி தேவியே போற்றி
- ஓம் தனுர் சக்தி தேவியே போற்றி
- ஓம் பாச சக்தி தேவியே போற்றி
- ஓம் அங்குச சக்தி தேவியே போற்றி
எல்லா சக்திகளும் கைவரப் பெறச் செய்யும் சர்வ சித்திப்ரத சக்ரத்தின் அதிதேவதையாகிய திரிபுராம்பா தேவிக்கும், அதிரகஸ்ய யோகினி சக்திகளுக்கும், பரிவார தேவதைகளுக்கும் இந்த மலர் அர்ச்சனையை மகிழ்வோடு சமர்ப்பிக்கிறேன்.
ஒன்பதாவது ஆவரணம் | சர்வானந்தமயச் சக்ரம் : பிந்து மையம் :
- ஓம் திரிபுரா தேவியே போற்றி
- ஓம் திரிபுரேசி தேவியே போற்றி
- ஓம் திரிபுர சுந்தரி தேவியே போற்றி
- ஓம் திரிபுராவாசினி தேவியே போற்றி
- ஓம் திரிபுரா ஸ்ரீ தேவியே போற்றி
- ஓம் திரிபுரா மாலினி தேவியே போற்றி
- ஓம் திரிபுரா சித்தா தேவியே போற்றி
- ஓம் திரிபுராம்பிகா தேவியே போற்றி
- ஓம் மகாதிரிபுர சுந்தரி தேவியே போற்றி
- ஓம் ஸ்ரீ லலிதாம்பிகையே போற்றி
உலகவாழ்வின் துன்பங்களையெல்லாம் நீக்கி பேரன்பு, பேரறிவு, பேராற்றல் யாவும் தந்து ஞான ஒளியில் என் ஆன்மாவைப் பிரகாசிக்கச் செய்யும் ஸ்ரீ மஹா திரிபுரசுந்தரி தேவியாகிய, சிவசக்தி இணைந்த வடிவாகிய லலிதாம்பிகை அன்னையின் திருவடிகளுக்கும், பராபராதி ரகஸ்ய யோகினி சக்திகளுக்கும், பரிவார தேவதைகளுக்கும் மகிழ்வுடன் இந்த அர்ச்சனையை சமர்ப்பிக்கிறேன்.
தூபம், தீபம் காட்டி நைவேத்யம் படைத்து கற்பூர ஆரத்தியுடன் பூஜையை நிறைவு செய்யலாம்.
ஸ்ரீ சக்ர பூஜை செய்யும் சுமங்கலிகள் மற்ற பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், வெற்றிலை, பாக்கு, பழம், பூச்சரம், மஞ்சள் கயிறு, வளையல், இரவிக்கை துணி ஆகிய மங்கலப் பொருட்களை வழங்கி அவர்களின் நல்வாழ்த்துக்களைப் பெற்றுக் கொள்வது அவசியம். கணவன், மனைவி, குழந்தைகளுடன் இவ்வழிபாட்டினைச் செய்வது மிகவும் நல்லது.
ஸ்ரீ சக்ரம் உலக சமாதானம் மற்றும் ஒற்றுமையின் சின்னம் ஆகும். எனவே அகில உலகமும் அமைதியுடனும், ஒற்றுமையுடனும், எல்லா நலன்களுடனும் வாழ வேண்டும் என்ற பொதுப் பிரார்த்தனையையும் செய்வது சிறப்பு.
ஸ்ரீ சக்ரம் வழிபடப்படும் திருக்கோவில்கள் :
ஸ்ரீ சக்ரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள திருக்கோவில்கள் தமிழகத்திலும், பாரதத்திலும் பற்பல உள்ளன. அவற்றுள் காஞ்சி காமாட்சி, திருவானைக் கோவில் அகிலாண்டேஸ்வரி, திருவொற்றியூர், தாய் மூகாம்பிகை ஆகிய புண்ணியத் ஸ்தலங்கள் மிகவும் புகழ்பெற்றவை. இத்தலங்களில் ஆதிசங்கரர் தன் திருக்கரங்களால் சக்தியூட்டி ஸ்ரீ சக்ரங்களைப் பிரதிஷ்டை செய்துள்ளார். அகிலாண்டேஸ்வரி அம்பிகையின் காதுகளை அலங்கரிக்கும் ஸ்ரீ சக்ர ஆபரணத்தில் ஒளிரும் தெய்வீக கிரணங்கள் பக்தர் தம் குறை தீர்க்கும் ஆற்றல் மிக்கவையாக இன்றளவும் உள்ளன.
பாஸ்கர ராஜபுரம் :
பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மகாராஷ்டிரா மாநிலத்தில் பிறந்து தஞ்சையில் வந்து வாழ்ந்த மகான் ஸ்ரீ பாசுரானந்த நாதர் எனும் பாஸ்கரராயர். அவர் வாழ்ந்த திருத்தலம் இன்றும் தஞ்சை மாவட்டத்தில் பாஸ்கரராஜபுரம் என்ற பெயரில் பிரபலமாக உள்ளது. இங்கு பாஸ்கரராயரால் ஸ்தாபிக்கப்பட்ட மஹாமேரு உள்ளது. ஸ்ரீ வித்யா உபாசனை, தியானம் ஆகியவற்றில் ஈடுபாடு உடையவர்கள் அவசியம் சென்று தரிசிக்க வேண்டிய திருத்தலம் இது.
ஸ்ரீ ராஜகாளியம்மன் கோவில் :
ஸ்ரீ ராஜகாளியம்மன் திருக்கோவில் திண்டுக்கல் மதுரை சாலையில், கன்னிவாடி எனும் ஊரின் அருகில் அமைந்துள்ளது. பதினெட்டுச் சித்தர்களின் ஒருவரான போகர் தவம் செய்த திருத்தலம் இது. ஆடிப்பதினெட்டு அன்று சிறப்பு விழா நிகழும் இத்திருத்தலத்தில் ஸ்ரீ சக்ரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
மாங்காடு காமாட்சியம்மன் கோவில் :
தவக்கோலத்தில் நிற்கும் அன்னை காமாட்சி பஞ்சாக்கினி தவம் செய்த திருத்தலம் இது. சிவபெருமானின் கண்களை ஒரு முறை பார்வதி தேவி விளையாட்டாக மூடிவிட பிரபஞ்சமே இருளில் மூழ்குகின்றது. சிவபெருமானின் ஆணைக்கிணங்க தேவியானவள் மாங்காடு தலத்தில் நான்கு திசைகளுக்கும் நான்கு அக்கினிகளை வளர்த்தி, ஐந்தாவதாக அவற்றின் நடுவில் ஓர் அக்கினியை ஏற்படுத்தி அதில் தன் இடது காலை ஊன்றி, வலது காலை மடித்து இடக்கையை உயர்த்தி ஜெபமாலை உருட்டி கடுந்தவம் புரிகின்றாள். பிறகு சிவபெருமான் காட்சி தந்து காஞ்சிபுரத்தில் அன்னையைத் தன்னோடு ஐக்கியப்படுத்திக் கொள்கின்றார்.
அன்னை அங்கிருந்து அகன்றும் தணியாமல் எரிகின்றது பஞ்சாக்கினி. நீண்ட காலம் அவ்வெப்பம் தனியாமல் சுட்டெரிக்க மக்கள் யாவரும் துயரில் ஆழ்கின்றனர். ஆதிசங்கரபகவத் பாதாள் இங்கு விஜயம் செய்து “ஸ்ரீ அர்த்தமேருச் சக்ரம்” என்ற ஸ்ரீ சக்ரத்தை பிரதிஷ்டை செய்விக்க வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவிற்று. இங்கு உள்ள ஸ்ரீ சக்ரம் உலகிலேயே உள்ள ஒரே ஒரு அரியவகைச் சக்ரம் ஆகும். இன்று உலகளவில் பேசப்படும் விஷயம் “வெப்பமயமாதல்” எனும் இயற்கைச் சீர்குலைவு ஆகும். அதற்கான மாற்று வழிகளை விஞ்ஞானிகள் பலவாறாக ஆராய்ந்து வருகின்றனர். ஸ்ரீ சக்ர, மஹாமேரு வழிபாடு ஆன்மீகம் உலகினுக்கு ஈந்துள்ள வெப்பமயமாதல் பிரச்சனையின் தீர்வுக்கான சிறந்த வழிபாடு எனலாம்.
கனக துர்கா ஆலயம் :
ஆந்திராவில் கிருஷ்ணா நதிதீரத்தில் கனகதுர்கா ஆலயம் அமைந்துள்ளது. இங்குள்ள தேவி சுயம்பு வடிவம் ஆகும். ஸ்ரீ ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த ஸ்ரீ சக்ரம் இன்றும் இங்கு வழிபடப்பட்டு வருகிறது.
சிவமேரு :
பிரம்ம ரகசியங்களாகிய தத்துவங்களை நம் ஞானியர் உள்முகமாக்கி, வெளிமுகமான புறவழிபாடுகளை எல்லாத் தரப்பு மக்களும் செய்துணர வழி செய்த பெருமை என்னென்று உரைப்பது. வியந்து போற்றவே தோன்றும் மெய்ஞான மரபுகள் பல. அவற்றுள் ஒன்றுதான் ஜோதிஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை. இங்கு பள்ளியறை பூஜையில் பார்வதியுடன் பவனி வரும் சிவஸ்வரூபம் சிவமேரு என்றழைக்கப்படும் அதிசயமாகும். பொதுவாக மேரு என்றாலே அது சக்தியை மட்டுமே குறிக்கும். ஆனால், இங்கோ சிவமேரு என்று அழைக்கப்படும் உட்பொருள் பக்தியில் மூழ்கி உய்த்துணர வேண்டிய ஒன்றாகும்.
மாசானி அம்மன் :
கோவை மாவட்டம் ஆனைமலை அருகே அமைந்துள்ளது மாசானி அம்மன் திருக்கோவில். மாசானம் எனும் மயானத்தில் படுத்த கோலத்தில் இருக்கின்றாள் அன்னை. உக்கிரமான இத் திருத்தலம் உலகில் அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்ட, அன்னை கொண்ட கோலமாகும். அன்னையின் உக்கிரம் தணிக்க நெற்றியில் ஒரு ஸ்ரீ சக்ரம் ஸ்தாபிக்கப்பட்டு வழிபாடு செய்யப்படுவது வியப்புத் தரும் உண்மையாகும்.
ஸ்ரீ மாமேரு தியான நிலையம் :
பண்ருட்டி, கண்டிகை கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ நகரத்தில், ஸ்ரீ மஹாமேரு பிரதிஷ்டை செய்யப்பட்டு ஸ்ரீ லலிதா மஹா திரிபுரசுந்தரி மேருவடிவில் வழிபடப்படுகின்றாள். இங்கு நித்யா தேவியர்க்கும், வாராஹி மற்றம் மாதங்கி தேவியர்க்கு உரிய சக்ரங்களும் அமைக்கப் பெற்று பூஜிக்கப்படுகின்றன. பௌர்ணமி அன்று சிறப்பு வழிபாடுகள் நிகழ்கின்றன.
ஸ்ரீ லலிதாம்பிகை பீடம் :
கோவையில் ஆனைகட்டி மலையடிவாரத்தில் பெரிய தடாகம் என்னும் ஊரில் ஸ்ரீ லலிதாம்பிகை பீடம் அமைந்துள்ளது. இங்கு ஸ்ரீ லலிதாம்பிகை அன்னையே விக்ரஹ வடிவிலும், மஹாமேரு வடிவிலும், ஸ்ரீ சக்ர வடிவிலும் வழிபடப்படுகின்றாள். ஸ்ரீ வித்தை நெறியில் சமயாச்சாரம் எனும் மார்க்கத்தின் அடிப்படை தியான முறைக்கு இங்கு அதிக முக்கியத்துவம் தரப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.
நிமிஷாம்பா கோவில் :
நிமிஷாம்பா கோவில் காவேரி நதிக்கரையில் ஸ்ரீ ரங்கப்பட்டினத்திலிருந்து 2 கி.மீ. தூரத்திலும், மைசூரில் இருந்து 17 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. இத்திருக்கோவில் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இதனை எடுப்பித்தவர் மும்மடி கிருஷ்ணராஜ உடையார் எனும் மைசூர் மன்னர். அம்பாளின் திருநாமம் நிமிஷாம்பா என்பதாகும். வேண்டும் பக்தர்களின் வேண்டுதலை நிமிஷ நேரத்தில் நிறைவேற்றி வைப்பவளாதலின் இத்திருநாமம். இத்திருக்கோவிலில் கல்லினால் வடிவமைக்கப்பட்ட மகிமை வாய்ந்த ஸ்ரீ சக்ரம் அமைந்துள்ளது சிறப்பாகும். நிமிஷ நேரத்தில் அம்பிகை அருள்பாவிக்கும் மகிமையும், ஸ்ரீ சக்ரத்தின் பேராற்றலும் இத்திருக்கோவிலின் பெருமைக்கு காரணங்கள் ஆகும்.
ஸ்கந்தாஸ்ரமம் :
தமிழகத்தில் சாந்தானந்த சுவாமிகள் அமைத்த ஸ்கந்தாஸ்ரமம், புதுக்கோட்டை புவனேஸ்வரி அதிஷ்டானம் ஆகியனவும், திருஈங்கோய் மலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஸ்ரீலலிதா மகிளா சமாஜ் தியான நிலையமும், ஸ்ரீ சக்ர மஹாமேரு வழிபாட்டில் முக்கிய இடம் பெறும் திருமடங்களாகும். நெரூரில் உள்ள சதாசிவபிரம்மேந்திரா அதிஷ்டானத்திலும் ஸ்ரீ மஹாமேரு அமைந்துள்ளது குறிப்பிடதக்கது.